சுயமரியாதை, பகுத்தறிவு, மனிதாபிமானம்,விஞ்ஞான பூர்வமானமான அணுகுமுறை ஆகியவையே இன்றைய தேவையாகும்
நம்மவர் மத்தியில் பகுத்தறிவு கருத்துக்கள் சரியாக விளங்கி கொள்ளப்படவில்லை என்றே கருதுகிறோம் .
பகுத்தறிவு என்றால் வெறுமனே கடவுள் மறுப்பு என்பதாக அர்த்தப்படுத்தி கொள்கிறார்கள்.
பலரும் கடவுள் என்று இங்கே குறிப்பிடுவது சமயங்கள் சார்ந்த நம்பிக்கை கோட்பாடுகளைதான்.
நாம் உண்மையில் அந்த பக்கத்திற்கே போகவிரும்பவில்லை .
கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் கவைக்கு உதவாத வெறும் பேச்சு என்ற பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் வரிகளே நமக்கு போதுமானவை என்றெண்ணுகிறோம்.
அது உண்மையில் ஒருவரின் தனி மனித சுதந்திரம் .
அதை பிறரின் மீது திணிப்பதை நாம் ஏற்று கொள்ள முடியாது.
அதுவே சரியான அணுகு முறையாகும் என்று நம்புகிறோம் .
மனித சமுதாயத்தின் நம்பிக்கை கோட்பாடுகள் காலகாலமாக மாறிக்கொண்டே வந்திருக்கிறது,
ஒரு தனி மனிதனின் சுதந்திர சிந்தனைக்கு கடிவாளம் போடும் சமயம் சார்ந்த கோட்பாடுகள் அவனின் பரிணாம வளர்ச்சிக்கு எள்ளளவும் உதவி செய்யாது என்பதே சரியான பகுத்தறிவு கோட்பாடு என்று கருதுகிறோம்.
ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சுயமரியாதை இருக்கிறது ,
பலதடவைகளில் பலருக்கும் சுயமரியாதை என்பதன் சரியான அர்த்தம் விளங்குவதில்லை.
சமுகத்தின் கட்டுப்பாடுகள் ஒரு தனிமனிதனை சுயமரியாதையை அங்கீகரிக்க வேண்டும் .
சுயமரியாதையை பற்றிய மதிப்பீடு ஒவ்வொரு மனிதருக்கும் இருக்க வேண்டும் .
அதை பற்றிய சரியான புரிதல் நம்மவருக்கு எவ்வளவு தூரம் இருக்கிறது என்பது கேள்விக்குறியாகும் .
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதனை அவனது ஜாதி அந்தஸ்து படிப்பு தோற்றம் அல்லது அவன் பேசும் பாஷை போன்ற காரணங்களை வைத்து எடைபோடும் குணம் நமக்கு தாராளமாக உண்டு,
இது தவறென்று கருதுகிறோம், மனிதனை சக மனிதனாக மட்டுமே பார்க்கவேண்டும்.
மனிதனை சகமனிதன் என்று நேசிக்க தெரியாத சுபாவம் நமக்கு உண்டானதற்கு என்ன காரணம் என்று நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்
சுயமரியாதை உள்ளவன் சக மனிதன் மீதும் அளவற்ற அன்பும் மரியாதையும் காட்டுவான்,
தன்னையே மதிக்காதவன் பிறரையும் மதிக்க மாட்டான்.
பிறரிடம் இருக்கும் பணம் தோற்றம் அந்தஸ்து அல்லது ஜாதி போன்றவற்றை கணக்கு பண்ணிதான் பழகுவான்,
இப்படியாக சகமனிதனிடம் நேசம் கொள்ளாது வெறும் அர்த்தமற்ற இயந்திரங்கள் போன்று நாம் மாறிவிட்டதற்கு என்ன காரணம் இருக்க முடியும் ?
வாழ்வைப்பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாத வெறும் மனிதர்களாக நாம் மாறிவிட்டோம் என்றே கருதுகிறோம் .
எம்மை சுற்றி உள்ள இந்த பிரபஞ்சமானது இயற்கை விதிகளுக்கு உட்பட்டே இயங்குகிறது,
நடக்கும் சம்பவங்கள் எல்லாமே எதோ ஒரு இயற்கை விதிகளுக்கு ஏற்பவே நடைபெறுகிறது,
அந்த இயற்கை விதிகள் என்ன ? கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே மறைந்துதான் ஆகவேண்டும் .
இது போன்று பல இயற்கை சார்ந்த உண்மைகள் அனுபவ வாயிலாகவும் விஞ்ஞான ரீதியாகவும் சகலராலும் ஏற்றுகொள்ளப்பட்ட உண்மையாகும்.
இந்த இயற்கை விதிகளுக்கு எல்லாம் சமயம் சார்ந்த சாயத்தை பூசுவது வெறும் செயற்கையான போலியான விடயம் என்றே தோன்றுகிறது .
நாம் செய்யும் காரியங்கள் எல்லாமே எதோ ஒரு காரண காரியத்தின் அடிப்படையில் ஒரு கணக்கிற்கு உட்பட்டே நடைபெறுகிறது,
இது நவீன விஞ்ஞானமாகும்.
நமக்கு தாகம் தீரவேண்டும் என்றால் நாம்தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
இல்லை இல்லை நமது தாகம் தீரவேண்டும் என்றால் கடவுள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நாம் நம்பவில்லை.
சுயமரியாதை, பகுத்தறிவு. மனிதாபிமானம். விஞ்ஞான பூர்வமானமான அணுகுமுறை ஆகியவையே இன்றைய தேவையாகும்
No comments:
Post a Comment