Wednesday, February 4, 2015

Image Trap ! இமேஜ் பற்றிய பயம் ஒரு பொறி ! இந்த பயம் இருந்தால் No Creativity?

பிறர் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் பலவேளைகளிலும் எமக்கு ஒரு சிறையாகி விடுகிறது, எம்மை பற்றி நாமே கருதிக்கொள்ளும் தோற்றங்களும் பலவேளைகளில் எம்மை நகரவிடாமல் செய்து விடுகிறது, பிறரின் அபிப்பிராயங்கள் எமது தீர்மானங்களின் மீது பாதிப்பை உண்டு பண்ணுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது,
அதன் காரணமாகவே பல சமயங்களில் நாம் நாமாக இல்லாமல் இருக்கிறோம். பிறரின் அபிப்பிராயங்கள் நமது மூளையை பல சமயங்களிலும் கழுவி விடுகிறது.நம்மை அறியாமலேயே  நாம் எமது சுய புத்தியை அல்லது சுய விருப்பத்தை மீறி நடந்து கொள்கிறோம் ஏனெனில் பிறர் எம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் எமக்கு அவ்வளவு அக்கறை.
பிறரின் அபிப்பிராயங்களுக்கு நாம் ஏன் பயப்படுகிறோம் ?
நாம் சுயமாக சுதந்திரமாக சிந்திக்கும் போதெல்லாம் சமுகத்தை நாம் வழிநடத்துகிறோம்.
பிறரின் அல்லது சமுகத்தின் அபிப்பிராயங்களுக்கு ஏற்ப சிந்திக்கும் பொழுதெல்லாம் நம்மை சமுகம் வழிநடத்துகிறது.

நாம் உலகை ரசிக்க வந்த ரசிகர்கள் ! ஆத்மாக்கள் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே!

நான் இப்போது தெரிவிக்க போகும் கருத்து உங்களில் அநேகருக்கு ஏற்றுகொள்ள முடியாத கருத்தாகும் . மிகவும் பழகி போன ஒரு கோட்பாட்டை எழுந்த மானத்தில் தூக்கி எறிவது சுலபம் அல்ல. மிகவும் மெதுவாக படிப்படியாக தான் ஆழமாக பதிந்து விட்ட கோட்பாடுகளை மறு பரிசீலனை செய்ய முடியும் . அடிப்படையில் எனக்கு பொறுமை இல்லை. தெரிந்ததை அல்லது நான் நம்புவதை எவ்வளவு விரைவாக வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக வெளிப்படுத்துவது. எனது சுபாவமாகும் .
அதிகம் யோசிக்கும் பொழுது நான் சுயநலவாதி ஆகிவிடுகிறேன். எனது கருத்தை நான் வெளிப்படுத்துவதால் சமுகத்தில் எனது கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டு விடும் என்ற பயம் அல்லது தயக்கம் என்னை  மௌனமாக்கி விடும் .
காலாகாலமாக நாம் எமது உடலுக்கு உரிய முதல் இடத்தை கொடுக்கவில்லை. அனேகமாக கடவுளுக்கு அல்லது நமது வழிகாட்டி குருவானவர் போன்றவர்களுக்கு முதல் இடத்தையும் அல்லது நமது ஆத்மாவுக்கு முதல் அல்லது இரண்டாவது இடத்தையும் கொடுத்து வந்துள்ளோம்
உண்மையில் எமது உடலுக்கு மிகவும் கீழான ஒரு ஸ்தானத்தையே வழங்கி வந்துள்ளோம்.