Friday, April 18, 2014

நீங்கள் ஏற்கனவே அறிந்த உண்மைகளை எல்லாம் நம்புகிறீர்கள் !

அடடா எனக்கு எல்லாம் தெரிந்து விட்டதே ? இனி புதிதாக தெரிவதற்கு என்ன இருக்கிறது ?  எனக்கு எல்லாம் தெரியும் !
எனது  மதத்திற்கு எல்லாம் தெரியும் .
எனது குருவுக்கு எல்லாம் தெரியும் ,
எனது கல்விக்கு எல்லாம் தெரியும் ,
எனது கலாச்சாரத்திற்கு எல்லாம் தெரியும் ,
இப்படியாக நான் சார்ந்துள்ள நம்பிக்கை கோட்பாடுகளுக்கு எல்லாம் தெரியும் ,
இனி புதிதாக ஒரு விடயத்தையும் நான் அறிய வேண்டியதில்லை ,
 மேற்கூறிய வாசகங்கள் எவ்வளவு அபத்தமானவை என்பதை நீங்கள் சிலவேளைகளில் புரிந்து கொள்வீர்கள் , ஏற்றுகொள்ளவும் கூடும் ,
இல்லை இல்லை நான் எப்போதும் புதிதாக எதையாவது கற்று அறிந்து கொள்ளவே விரும்புகிறேன் என்று நீங்கள் சிலவேளை சொல்ல கூடும்,
இந்த இடத்தில உங்களின் கருத்துக்கு நான் மறுப்பு சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் ,
நீங்கள் நிச்சயமாக உங்களுக்கு எல்லாம் தெரியும் என்றுதான் நம்புகிறீர்கள் .
ஏனெனில்  அடிப்படையில் நீங்கள் ஒரு நம்பிக்கை வாதியாகும் ,
நீங்கள் உங்கள் கடவுளை நம்புகிறீர்கள் '
உங்கள் குரு கூறும் உபதேசங்களை நம்புகிறீர்கள்.
உங்கள் சமுகம் உங்களுக்கு சொல்லித்தந்த  கோட்பாடுகளை நம்புகிறீர்கள் .
உண்மையில் நீங்கள் ஏற்கனவே  அறிந்த  உண்மைகளை எல்லாம் நம்புகிறீர்கள் .

இந்த நம்பிக்கையானது  உங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற கருத்தை உங்கள் மனதில் மிக மிக ஆழமாக பதித்துள்ளது,
இது சரியா தவறா என்பதல்ல பிரச்சனை  நீங்கள் அனேகமாக சஞ்சலத்திற்கு அப்பாற்பட்டு உங்கள் நம்பிக்கைகளை  போற்றி  மிகவும் சந்தோஷமாக உள்ளீர்கள்.
மகிழ்வாக இருப்பதற்கு அறிவாளியாக இருக்க வேண்டியது அவசியம் அல்ல.

பல ஆயிரம் ஆண்டுகளாக வழிகாட்டிகள் என்று கூறப்படுபவர்களால்  அறிவுரைகள் அல்லது சமய நம்பிக்கைகள் போன்ற ஆறுதல் மாத்திரைகளால்  சுகமாக உள்ளீர்கள்.

கேள்வி எதுவும் கேட்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை,
அப்படி தப்பி தவறி ஏதாவது கேள்விகள் எழுந்தாலும் சமயமும் சாஸ்திரமும் அல்லது கலாச்சாரமும் உங்களுக்கு வேண்டிய பதில்களை  லாரி லாரியாக அள்ளி தந்துவிடுகின்றன ,
இப்படிதான் யுகம் யுகமாக ஆப்பிள் கீழே விழுந்தலென்ன மேலே போனால் என்ன சாப்பிட கிடைத்தால் சரி என்று கோடானு கோடி மனிதர்கள் தூக்கத்தில் இருந்தனர் ,

அந்த போக்கிரி ஐசக் நியுட்டனுக்கு மட்டும் ஏன் அந்த ஆப்பிள்  கீழே விழுகிறது என்ற கேள்வி எழுந்தது ?

ஆப்பிள் என்றால் கீழேதான் விழும் அதிலென்ன அதிசயம் என்று எல்லோரும் சுகமாக நம்பி பொழுது , நியுட்டன் மட்டும் ஏதோ ஒன்று எனக்கு தெரியவில்லை என்று சந்தேகப்பட்டார் .
ஏன் ஆப்பிள் கீழே விழவேண்டும் ?
அது எனக்கு தெரியவில்லயே ?
என ஐசக் நியுட்டன் எண்ணிய பொழுதுதான்  அவர் விஞ்ஞானியாக உருவெடுத்தார் ,
எல்லாம் வழமை போல போய் கொண்டிருந்தால் அவை சரியாக போவதாக அர்த்தம் இல்லை,


இந்த உலக சரித்திரத்தில் எல்லாம் சரியாக போய் இருந்திருக்குமாயின்  இந்த உலகம் ஏன் பல ஆயிரக்கணக்கான யுத்தங்களை கண்டிருக்க வேண்டும் ?

இப்போது நீங்கள் இந்த உலகிற்கு நன்மை செய்கிறீர்களா ?
இதற்கு உரிய சரியான பதிலை உங்களால் சொல்லமுடியுமா ?
சுற்று புற சூழலை பற்றி நான் கூறவரவில்லை ,

உங்கள் உள்ளம் பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு உள்ளதா என்ற கேள்வியை நீங்கள் கேட்காத வரைக்கும் உங்கள் வழமையான நம்பிக்கைகள் உங்களை தாலாட்டும் ,
அவை ஒருபோதும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டாது ,

ஆனால் உங்களை ஒரு போதும் கண்விழித்து பார்க்க விடாது ,

எம்மை சுற்றிய இந்த உலகமும் மனித சமுதாயமும்  எந்த வழியில் செல்கின்றன என்ற கேள்வியை நீங்கள் கேட்க மாட்டீர்கள் ,
உங்களுக்காக அந்த கேள்விகளை உங்கள் சமயமும் குருவும் இதர வழிகாட்டி கோட்பாடுகளும் கேட்கட்டும் ,
எனக்கேன் அந்த வீண் வம்பு என்று மிக ஆனந்தமாக தூங்குகிறீர்கள் .
ஆரம்பத்தில் இருந்து கேள்வி கேளுங்கள் ,
உங்களுக்கு உரிய கேள்விகளையும் பதில்களையும் நீங்கள் மட்டுமே கண்டு அறிய முடியும் ,
யார் யாரோ கேட்டதையும் கண்டதையும் உங்கள் அறிவு என்று நம்பி ஏமாறவேண்டாம் ,
நேற்று சொன்னது இன்று சரியாக இருக்குமா ?
அவர் சொன்னது எனக்கு சரியாக இருக்குமா ?
அந்த வழி எனது வழியாக இருக்க முடியுமா ?
நீங்களே உங்கள் ஆசிரியன்,
நீங்களே உங்கள் ஞான குரு,
இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு ஜீவராசியும் ஒவ்வொரு ஒவ்வொரு நோக்கத்திற்காக பிறக்கின்றன,
இந்த பிரபஞ்சம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான காட்சியையும் அதற்குரிய  நோக்கத்தையும் கொண்டுள்ளது,
உங்களுக்கான நோக்கத்தையும் காட்சியையும் நீங்கள் மட்டுமே காண முடியும் ,
அந்த நோக்கத்தையும் நீங்கள் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்,
சிந்தனை தூக்கத்தை வரவழைக்கும் தாலாட்டுகளில் இருந்து விடுபடுங்கள் ,

எதையும் மீண்டும் மீண்டும் உச்சரிப்பது அல்லது மனனம் செய்வது வெறும் மெக்கானிக்கல் வேலை , அனேகமாக சிந்தனை என்ற பெயரில் பல சமயங்களில் நாம் அரைத்த மாவையே ஆட்டுகல் போல அரைத்து கொண்டுதான் இருக்கிறோம் ,

இது ஆழமான  அறிவியல் தூக்கத்தை வரவழைக்கும் செயலன்றி வேறல்ல,

நித்திரை தேவை படும் சமயங்களில் தற்காலிகமாக உபயோகபடுத்தலாம் ,

ஆனால் எப்போதுமே தூங்கி கொண்டிருப்பது வெறும் சோம்பல்தனம் ,

உங்கள் சுய தேடலை அப்படியே தமது பதில்கள் அல்லது ஆசுவாச வார்த்தைகள் மூலம் குழி தோண்டி புதைத்து விடுவதைத்தான் பலவிதமான வழிகாட்டிகளும் அவர்தம் மார்க்கங்களும்  செய்கின்றன,
ஏற்கனவே அறிந்த நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகளை மீண்டும் மீண்டும் அறிந்து ஒன்றுமே ஆகப்போவதில்லை ,
நீங்கள் சுயமாக தேட முடியும் , சுயமாகத்தான் தேடலாம்
 Atmospheric pollution is most harmless when compared to the spiritual and religious pollution that have plagued the world.

No comments:

Post a Comment